sttu.org.sg
sttu.org.sg
2019 சங்க நிகழ்வுகள்
தமிழவேள் நினைவுக் கருத்ததரங்கம் - ஏப்ரல் 2019
ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 2019 தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நம் சங்கம், 17.04.19ஆம் நாளன்று 'தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் மரபும் பண்பாடும்' என்னும் கருப்பொருளில் தமிழவேள் நினைவுக் கருத்தரங்கத்தை நடத்தியது.
சுமார் 270 தமிழாசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். புகழ்பெற்ற தன்முனைப்புப் பேச்சாளரான Dr. காதர் இப்ராஹீம் அவர்கள் கருத்தரங்கத்தில் முதன்மையுரை நிகழ்த்தினார். அதையடுத்து நடைபெற்ற கலந்துரையாடலின்போது (Panel Forum) நம் நாட்டில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் தமிழாசிரியர்கள் நம் மரபையும் பண்பாட்டையும் இணைப்பதில் எதிர்நோக்கும் சவால்கள் யாவை, அவற்றைச் சமாளிக்கத் தமிழாசிரியர்கள் எத்தகைய அணுகுமுறைகளைப் பயன்படுத்தலாம் ஆகியவை தொடர்பான பல கருத்துகள் பகிர்ந்துகொள்ளபட்டன.
கலந்துரையாடலின்போது கருத்தரங்கப் பங்கேற்பாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு, சங்கத் தலைவர் திரு. சாமிக்கண்ணு அவர்களின் தலைமையில், Dr. காதர் இப்ராஹிம், தலைமை முதன்மை ஆசிரியர் Dr. ஜெயராஜதாஸ் பாண்டியன், தேசியக் கல்விக் கழக விரிவுரையாளர் Dr. சீதாலக்ஷ்மி ஆகியோர் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
சுகாதார அமைச்சிற்கு மொழிபெயர்ப்பு உதவி 2019
சுகாதார அமைச்சின் வேண்டுகோளினை ஏற்று சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும் சங்க உறுப்பினர்களும் சுகாதார அமைச்சின் ஆங்கில வாசகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த நிகழ்வு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூரின் 200 ஆண்டு வரலாறு கற்றல் பயணம், 29 ஜூன் 2019
தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிங்கப்பூரின் 200 ஆண்டு வரலாறு கற்றல் பயணத்தில் சங்க உறுப்பினர்களான தமிழாசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
நல்லாசிரியர் விருது, 31 ஆகஸ்டு 2019
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த நல்லாசிரியர் விருது நிகழ்ச்சி ஆகஸ்ட்டு மாதம் நடைபெற்றது. தமிழாசிரியர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக இந்நிகழ்வு செவ்வனே நடைபெற்றது. கல்வியமைச்சு அதிகாரிகளும் தமிழாசிரியர் சங்கமும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
மலாக்காவில் ஆசிரியர்தினக் கொண்டாட்டம், 06-08 செப்டம்பர் 2019
இவ்வாண்டு நம் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்தினக் கொண்டாட்டம் மலேசியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மலாக்காவில் கொண்டாடப்பட்டது. இது மூன்று நாள் சுற்றுலாப்பயணத்துடனான ஆசிரியர் தினமாக அமைந்தது தனிச்சிறப்பாகும். ஆசிரியர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்ததுடன் ஆசிரியர் தினத்தையும் அங்கே கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஏற்பாட்டில் உலகத் தமிழாசிரியர் மாநாடு, சென்னை 6-8 டிசம்பர் 2019
இம்மாநாட்டில் சிங்கப்பூர் பேராளர்களாகிய கல்வியமைச்சு அதிகாரிகளும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்தனர். இவர்களை நம்சங்கம் வழிநடத்திச் சென்றது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இம்மாநாட்டில் பல்வேறு நாட்டுப் பேராளர்கள் கற்றல் கற்பித்தல் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்தனர். ஆய்வுக்கட்டுரைகள் தமிழ்வழிக்கல்வியை மேம்படுத்த உதவும் கற்றல் கற்பித்தல் உத்திகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளாக இருந்தமை பயன்மிக்கதாக இருந்தன.
முத்தமிழ் விழா, புதுச்சேரி, இந்தியா 2019
நம் சங்கம் முத்தமிழ் விழா நிகழ்வு ஒன்றினைப் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழா நான்கு நாள் பயிலரங்கு நிகழ்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு டிசம்பர் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்றது. சிங்கப்பூரிலிருந்து கல்வியமைச்சு அதிகாரிகளும் ஆசிரியர்களும் பயிலரங்குகளில் கலந்துகொண்டனர். விருந்து நிகழ்வுடன் அறிமுக விழா தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பங்கேற்பாளர்கள் தமிழ்மொழி, தமிழிலக்கியம், கலை மற்றும் கலாசாரம் தொடர்பான பயிலரங்குகளில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.