top of page
NVKS

2013 சங்க நிகழ்வுகள்

3 மார்ச் 2013 

 

பகிர்வரங்கம் - நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும். 

மூன்று பயனுள்ள அங்கங்களைக் கொண்ட இப்பகிர்வரங்கில் முதலில்  'இதய நோயும் இந்தியர்களும்' என்ற தலைப்பில் இதய மருத்துவ நிபுணர் Dr. L. ஜெயராம் அவர்கள் இதய நோய் ஏற்படுவதற்கான காரணங்களையும் தடுப்பு முறைகளையும் பற்றி படங்களின் துணையோடு விளக்கினார்.  

அடுத்து, 'உயில் எழுதுவதன் அவசியமும் அப்போது கவனத்தில் கொள்ளவேண்டியவையும்.' என்னும் தலைப்பில் வழக்கறிஞர்  திரு. R. கலாமோகன் சட்ட நுணுக்கங்களை விளக்கித் தெளிவு-படுத்தினார்.'    

பகிர்வரங்கில் நிறைவாக 'வருமானத்தைப் பயன்முனைப்புமிக்க வகையில் முதலீடு செய்தலும் அதற்குரிய சில வழிமுறைகளும்' என்னும்  தலைப்பில் நிதி நிர்வாக ஆலோசகர் திரு. ஜாஃபர் கனி அவர்கள் பல எடுத்துக்-காட்டுகளைப் பயன்படுத்தி விவரித்தார்.

sttu.org.sg

 

13 மார்ச் 2013

 

தமிழவேள் நினைவுச் சொற்பொழிவு

 

தமிழ்மொழி விழா 2013-இன் ஓர் அங்கமான 'தமிழவேள் நினைவுச் சொற்பொழிவு' நிகழ்ச்சிக்குக் கவிஞர் அறிவுமதியின் சிறப்புரைக்கு ஏற்பாடு செய்திருந்தது.  'தமிழர் வாழ்வியல்' என்னும் தலைப்பில் அவர் மிகச் சிறப்பாக உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சிக்குப் பெருமளவில் தமிழாசிரியர்களும் சமூகத் தலைவர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.  

3-4 ஜூன் 2013

10ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு

10 WTTC

2013, ஜூன் மாதம் 3-4ஆம் தேதியில் கோலாலம்பூர் நகரில் 10ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.  மலேசியா, சிங்கப்பூர், இந்தியா முதலிய சுமார் 9 நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.  நம் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் சிங்கப்பூரிலிருந்து 50 ஆசிரியர்கள் மாநாட்டில் பங்குபெற்றனர்.  

 

இம்மாநாட்டின்போது 'உலகத் தமிழாசிரியர் பேரவை' என்னும் அமைப்பு அதிகாரபூர்வமாகத் துவக்கம் கண்டது. பேரவையின் தலைவராகச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. சி.சாமிக்கண்ணு அவர்களை  மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகளின் பேராளர்கள் தேர்ந்தெடுத்தனர். இது நம் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கும் செய்தியாகும்.  

 

 

25 செப்டம்பர் 2013

 

ஆசிரியர் தின விருந்து

 

நம் சங்கம் 25-9-2013ஆம் நாளன்று நடத்திய ஆசிரியர் தின விருந்தில்  பணி ஓய்வு பெற்ற சங்க உறுப்பினர்கள் 8 பேருக்குக் நம் சங்கத்தின் மரபுப்படி நாம் பாராட்டும் பரிசும் அளித்துச் சிறப்பு செய்தோம்.

 

 

நவம்பர் 25 - 29,  2013  

 

மியன்மார் கல்விப் பயணம்

 

மியன்மார் நாட்டில் இயங்கிவரும் மிகப் பெரிய தமிழ்ச் சமூக அமைப்பு, மியன்மார் தமிழ்ச் சங்கமாகும். அந்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் படிக்க வாய்ப்பில்லை என்றாலும் இச்சங்கம் அங்கு வாழும் தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழ்மொழியை வாழும் மொழியாக விளங்கச் செய்ய அரும்பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

 

ஓரளவு தமிழ் படிக்க எழுதத் தெரிந்த இல்லத்தரசிகளே மாலை வேளையில் கோயில் வளாகத்தில் தமிழாசிரியர்களாக இருந்து அங்கிருக்கும் சிறுவர்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பித்து வருகின்றனர். 

எவ்வித பயிற்சியும் பெறாமல் தமிழ்ப் பணி செய்துவரும் 50 ஆசிரியர்களுக்கு உதவுமாறு அச்சங்கம் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தைக் கேட்டுக்கொண்டது. எனவே திரு. சி. சாமிக்கண்ணுவின் தலைமையில்  4-பேர் கொண்ட நம் சங்கத்தின் கல்வியாளர்கள் குழு 25-11-2013 தேதியன்று யங்கூன் புறப்பட்டுச் சென்றது.  அடிப்படைத் தமிழ் இலக்கணம்,  பேசுதல்  திறனை  வளர்த்தல், ஈடுபாடுமிக்கக் கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள்  போன்ற சில தலைப்புகளில் சில கற்றல் கற்பித்தல் நுணுக்கங்களை நம் ஆசிரியர்கள் பகிர்ந்துகொண்டனர்.

 

மூன்று நாள்கள் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டு  பெரும் பயனடைந்ததாகவும் கருத்துரைத்த ஆசிரியர்கள், தொடர்ந்து இதுபோன்ற வகுப்புகளைத் தங்களுக்கு நடத்துமாறும் நன்றிப் பெருக்குடன் கேட்டுக்கொண்டனர்.

உலகெங்கிலும் தமிழ்மொழி வாழ்வும் வளமும் பெறச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தொடர்ந்து தம் பங்கினை ஆற்றிவரும்.

bottom of page