

sttu.org.sg
sttu.org.sg


2024
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் 2024-ஆம் ஆண்டு நடவடிக்கைகள்.
‘ஆற்றலின் கருவறை – தமிழ் வகுப்பறை'
2024-ஆம் ஆண்டின் தமிழ்மொழி விழாவையொட்டிச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களின் நினைவுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கு ஏப்ரல் 20-ஆம் தேதி சனிக்கிழமையன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வளர்தமிழ் இயக்கம், கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகியவற்றின் ஆதரவில் நடைபெற்றது.
‘ஆற்றலின் கருவறை – தமிழ் வகுப்பறை’ என்னும் கருப்பொருளில் அமைந்த இக்கருத்தரங்கின் நோக்கம் பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம், நடிப்பு, நாடகம் மற்றும் சமூக ஊடக உத்திமுறைகளைப் பயன்படுத்தித் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலை எவ்வாறு பயன்முனைப்புமிக்க வகையில் மேம்படுத்தலாம் என்பதாக அமைந்தது.
இவ்வாண்டின் கருத்தரங்கில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டவர் திரு. சீனுராமசாமி அவர்கள். இவர் ஓர் எழுத்தாளரும் கவிஞரும் தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குனருமாவார்.
தமிழர்களது பண்பாட்டு அடையாளங்களையும் கலாச்சாரச் சுவடுகளையும் அவற்றுள் படிந்துள்ள நமது விழுமியங்களையும் தம் திரைப்படங்களில் காட்சியமைப்பு, வசன உருவாக்கம் முதலியவற்றின்வழி சித்தரிக்கும் உத்திமுறைகளை திரு. சீனுராமசாமி கருத்தரங்கில் பகிர்ந்துகொண்டார். நம் வகுப்பறைகளில் மகிழ்வான கற்றல் கற்பித்தலுக்கு இந்த உத்திமுறைகள் வழிவகுக்கும் என்பதே இக்கருத்தரங்க ஏற்பாட்டுக்குழுவின் நம்பிக்கையாகும்.
மீடியோகார்ப் வசந்தம் ஒளிவழியின் தமிழ்ச்செய்திப்பிரிவு இந்நிகழ்வைப்பற்றிய செய்திக் காணொளியை ஒளிபரப்பியது.

2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஒருங்கிணைப்பில் மதுரை மற்றும் கொடைக்கானலுக்குக் கல்வி மற்றும் பண்பாட்டு முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடக்கநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகத்தின் முதன்மை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் என 29 ஆசிரியர்கள் இந்தக் கற்றல் முகாமில் கலந்துகொண்டனர்.
ஏழு நாட்கள் நடந்தேறிய இந்தக் கல்வி மற்றும் பண்பாட்டு முகாமில் ஆசிரியர்கள் 9 பயிலரங்குகளிலும், முக்கியக் கல்வி நிறுவனங்கள், பண்பாட்டு மையங்கள், பள்ளிகள் ஆகியவற்றிற்கு மேற்கொள்ளப்பட்ட கற்றல் பயணங்களிலும் கலந்துகொண்டனர்.







