top of page

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்க வரலாறு

1951-இல் தமிழாசிரியர் சங்கத்தைத் தோற்றுவித்த நம் முன்னோடிகள்.

1951ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் அதிகாரபூர்வமாகத் துவக்கம் கண்டது.

    

1956இல் நம் சங்கம் ஆங்கிலப் பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தைத் தமிழாசிரியர்களுக்குப் பெற்றுத் தந்தது.

 

மலேசியா (ஜொகூர்பாரு)  சென்று  ஆசிரியர் பயிற்சி பெற்று வந்த தமிழாசிரியர்களுக்கு நம் சங்கத்தின் முயற்சியால்  1964 ஆண்டிலிருந்து   தரமான தமிழாசிரியர்  பயிற்சியைச் சிங்கப்பூரிலே வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்தது.

1964ல் உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலை 4 முடித்த மாணவர்கள்  வெளிவரத்  தொடங்கிய பிறகுதான் தமிழாசிரியர்கள் பெரும்பாலோர் உயர்நிலைக்கல்வி பயின்றவர்கள் என்ற நிலை ஏற்பட்டது. இவர்களின் வருகையால் தமிழாசிரியர்களின் தகுதியும் தரமும் உயர்ந்தது. உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியிலிருந்து வெளிவந்த மாணவர்களின் வருகை சிங்கப்பூர் தமிழ்க் கல்வி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

 

 1968 ஆம் ஆண்டு தமிழ்க் கல்வியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்ற சங்கத்தின் வேண்டுகோளின்படி தமிழகத்திலிருந்து இரண்டு பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

 

1971 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியுடனும் கல்வி அமைச்சுடனும் இணைந்து முதல் தமிழ் கற்றல், கற்பித்தல் ஆய்வரங்கு ஒன்றைச் சங்கம் நடத்தியது.

 

கல்வி அமைச்சில் தமிழ்ப் பகுதிக்குக் கல்வி அதிகாரிகளாகத் தமிழாசிரியர்களே நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைக் கல்வி அமைச்சு 1976ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

 

1970ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை இலக்கியப் போட்டிகளைச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தொடர்ந்து நடத்தி வந்தது.

 

1978 ஆம் ஆண்டில் தமிழக அரசு பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டபோது, அதனை ஆதரித்துச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் சங்க ஏடான ‘தமிழாசிரியர் குரலில்’ அதன் அந்நாள் துணைச் செயலாளர்                     திரு சி சாமிக்கண்ணு அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். (அக்டோபர் 1978)

 

1983 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 26ஆம் நாளில் வெளியிடப்பட்ட கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி, 13 எழுத்துகள் குறித்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் சிங்கப்பூர்ப் பள்ளிகளில் நடப்புக்கு வந்தது. 

1985ஆம் ஆண்டு முதல் தமிழாசிரியர்கள் தமிழ்நாடு சென்று, தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

   

      1991 ஆம் ஆண்டில் தமிழாசிரியர்களின் கணினி அறிவை வளர்க்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. ‘பாரதி’ என்னும் மென்பொருள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

      

      1991 ஆம் ஆண்டில் சிங்கப்பூர்த் தொலைத் தொடர்பு வாரியத்துடன் இணைந்து, உலகில் முதல், Teleview - ‘ஸ்மார்ட்’ என்னும் மின்னியல் தமிழ்ப்பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  

1986-இல் தமிழாசிரியர் சங்கப் பணிமனை

 (சிராங்கூன் பிலாசா) திறப்புவிழா.

 1992 ஆம் ஆண்டு நம் சங்கம், முதலாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டை சிங்கப்பூரில் சிறப்பாக நடத்திச் சாதனை படைத்தது. இதுவரை, நம் சங்கத்தின் ஆதரவோடு,  பல்வேறு நாடுகளில் பதினோரு மாநாடுகள் நடைபெற்றுள்ளன.  

 

1994ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களோடு (மதுரை, தஞ்சாவூர்) இணைந்து பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன. புதுவை மொழியியல் நிறுவனத்துடன் இணைந்தும் ஆசிரியர் பணியிணைப்புத் திட்டம் நடத்தப்பட்டது. இதுபோன்ற 6 திட்டங்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

 

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கடந்த 26 (1992 முதல்) ஆண்டுகளாகத் தொடக்க உயர்நிலை மாணவர்களுக்குத் தமிழ்த் துணைப்பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

 2001ஆம் ஆண்டு வளர்தமிழ் இயக்கத்திலும் 2006ஆம் ஆண்டு முதல் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவிலும் சங்கம் அங்கத்துவம் பெற்றுத் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பங்களித்து வருகிறது.

      

2002 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் தமிழ் முரசுடன் இணைந்து நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது.  2012ஆம் ஆண்டு முதல், தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு  ‘வாழ்நாள் நல்லாசிரியர் விருது’ வழங்கி வருகிறது. 

 

2005ஆம் சங்கத்தின் முயற்சியால் ‘சிம்’ பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியர்கள் இளங்கலைப் பட்டம் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. 

 சங்கத்தின் முயற்சியால் சிங்கப்பூரில் பட்டக்கல்வி தொடங்கியதும், 1988ஆம் ஆண்டில் சிராங்கூன் பிளாசாவில் சங்கப் பணிமனையையும் பின்னர் 2006இல் தமிழாசிரியர் மாளிகையை வாங்கி 2010ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி திறப்பு விழா கண்டதும் 2018 ஆண்டில, சிம் லிம் டவர், சிட்ரான் கடைத்தொகுதி ஆகியவற்றில் மூன்று மனைகளை வாங்கியிருப்பதும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் சாதனைகளுள் குறிப்பிடத்தக்கவையாகும்.

 

தமிழாசிரியர்களின் நலன், திறன் மேம்பாடு, கல்வி கொள்கைகள் மற்றும் தமிழ்மொழி, தமிழ்க்கல்விக்கு அக்கறைக்குரியவை ஆகியவற்றைப் பற்றி கருத்துரைப்பதோடு குறைகளைக் களைய ஆவன செய்வதைச் சங்கம் முக்கியப் பணியாகக் கொண்டு செயல்படுகிறது.

 

2010-இல் தமிழாசிரியர் மாளிகையின் திறப்புவிழா.

bottom of page